தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்..!

தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Update: 2022-10-20 17:27 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் வரும் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பலகாரம், உடைகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். பண்டிகை காலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

* வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு. சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள் போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 போலீசார் ஈடுபட உள்ளனர்.

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், சென்னை பெருநகரில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட 4 இடங்களிலும் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு. நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர்.

* தி.நகர். வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதிகளில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் கண்காணித்து வருகின்றனர். தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் 33 போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் சுற்றுக் காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்