தீபாவளி பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர். சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள்.
அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பஸ்களுடன் 4,218 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.