கூடலூர் அருகே ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவதில் குளறுபடி -ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் விநியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-05-09 00:30 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் விநியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

அரிசி வினியோகத்தில் குளறுபடிகள்

நீலகிரி மாவட்டத்தில் ஆதிவாசி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 405 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 5 பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மாதம்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு மாதத்துக்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் அரிசி மட்டும் வழங்கப்படாமல் உள்ளது.

வாக்குவாதம்

இது குறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் விசாரிக்கும் போது ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரிசி வழங்க முடியாமல் உள்ளது. இந்தக் குளறுபடி சில தினங்களில் சரி செய்யப்பட்டு வழக்கம்போல் அரிசி விநியோகம் சீராக நடைபெறும் என விளக்கம் அளித்து வருகின்றனர்.

இருப்பினும் ஒரு வாரம் ஆகியும் அரிசி வழங்காமல் உள்ளதால் ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் காரணமாக நிலைமையை சமாளிக்க முடியாமல் பல ஊழியர்கள் கடைகளை மூடிவிட்டு செல்கின்றனர். எனவே குளறுபடிகளை சரி செய்து பொதுமக்களுக்கு அரிசி விரைவாக வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து வட்ட வழங்கல் துறையினர் தரப்பில் கேட்ட போது, ஒவ்வொரு கார்டுக்கும் அரிசி ஒதுக்கீடு செய்வது குறித்த விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கோட்டாவில் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு வழங்கக்கூடிய 5 கிலோ அரிசி மட்டும் விநியோகிக்கப்படுகிறது. மாநில அரசின் பங்களிப்பு விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்தவுடன் உடனடியாக பொதுமக்களுக்கு தடை இன்றி அரிசி வழங்கப்படும். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்