மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி. மு.க.வில் பிளவு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் தலைமையில் தற்போது அ.தி.மு.க. 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட் டில் வழக்கும் நடந்து வருகிறது.
கூட்டணி முயற்சி
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க பா.ஜனதா தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இயலவில்லை.
இருந்தாலும் வரும் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள பா.ஜனதா ஆர்வம் காட்டி வருகிறது. இந்த முறை பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையும். அதில் அ.தி.மு.க. இடம்பெறும் என்ற பொருள்பட அதன் தலைவர்கள் பேசி வந்தனர்.
இந்தநிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, 'நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும்' என்று உறுதிபட பேசி இருக்கிறார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள காலை 10.40 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
எடப்பாடி பழனிசாமி உறுதி
கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கி உள்ளார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். இளைஞர் பாசறை குறித்து அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
இந்த அறிவுரைகளை பின்பற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்று கூறியதோடு, 'நம்ம (அ.தி.மு.க.) தலைமையில்தான் கூட்டணி அமையும், இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்' என்று எடப்பாடி பழனி சாமி தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடத்தப்படும் என்றும், இடம் மற்றும் தேதியை பின்னர் தெரிவிப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் வருகிற ஜனவரி 9-ந் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான பிரச்சினையில் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.
அரசியலில் போலி
இதுதவிர டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த பேச்சும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கி பேசி உள்ளனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, "ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தி.மு.க.வின் 'பி டீம்' போல் செயல்படுகிறார்கள். துரோகிகள் போனது போனதாகவே இருக்கட்டும். இனி அவர்களுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை. அவர்களை சேர்ப்பது குறித்து யாரிடமும் எந்த சமரச பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்து உள்ளார்.
இதே போன்று நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, "பொருட்களில் போலியானவற்றை பார்த்து இருப்போம். அதே போன்று அரசியலில் போலி யார்? என்றால் அது ஓ.பன்னீர்செல்வம்தான்" என்று மிகவும் கடுமையாக தாக்கி பேசி உள்ள ார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தம்பிதுரை எம்.பி., தங்கமணி, டி.ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, தளவாய்சுந்தரம், பச்சைமால் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், பாலகங்கா, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.