கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டுவிட்டருக்கு மாவட்ட காவல்துறை கடிதம்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டுவிட்டருக்கு மாவட்ட காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. இதன் மூலமாக, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டுவிட்டருக்கு மாவட்ட காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கலவரம் குறித்து வதந்தி பரப்பியவர்களின் விவரங்களை கோரும் நோக்கில் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளனர்.