வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
ஆய்வு
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன்கோவில் ஆகிய பகுதியில் நேற்று காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களையும், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களையும் தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல அமராவதி அணையில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இப்போது 2 லட்சத்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றன.
301 பேர்
இதனால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அங்குள்ள 301 பொதுமக்கள் முறையான இடத்தில் தங்க வைத்து தேவையான உணவு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து கொண்டு இருக்கின்றது. தற்போது ஆய்வு செய்து கொண்டிருக்கும் தவிட்டுப்பாளையத்தில் உள்ள முகாமில் அதிகமான மக்கள் தங்கி இருக்கிறார்கள்.இதற்காக நேற்று மாலை 4 மணியளவில் இருந்து மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இப்பகுதியில் எந்தவிதமான உயிரிழப்புகளும் வந்துவிடக்கூடாது என்பது அரசின் நோக்கம். அதேபோல் பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு எந்த காரணத்திற்காகவும் செல்ல வேண்டாம்.
தொடர்ந்து கண்காணிப்பு
தொடர்ந்து முதல் நிலை குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தோடு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.முன்னதாக பெரியஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.