மாவட்ட அளவிலான பணிமனை கூட்டம்
திருவண்ணாமலை வேளாண் விற்பனை, வணிகத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பணிமனை கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை 2-ன் கீழ் ஆலையாறு உபவடி நிலப்பகுதியிலான தண்டராம்பட்டில் மாவட்ட அளவிலான இடைமுக பணிமனை கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை வணிகம் துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்று தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் பற்றியும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, வேளாண்மை உதவி இயக்குனர் (மத்திய அரசு திட்டம்) ஏழுமலை, தோட்டக்கலை உதவி இயக்குனர் கங்கா, வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய தலைவர் வைத்தியலிங்கம்,
கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பஞ்சாபகேசன், உதவி செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், சிவக்குமார், மாவட்ட நபார்டு வளா்ச்சி மேலாளர் விஜய்நிஹார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் விளைப்பொருட்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.
இதில் தண்டராம்பட்டு மற்றும் செங்கம் வட்டாரத்தை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் காயத்ரி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கட்ராமன், விபிஷ்ணன், பழனி ஆகியோர் செய்திருந்தனர்.