கரூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு கவிதை, பேச்சு போட்டிகள்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு கவிதை, பேச்சு போட்டிகள் 27-ந்தேதி நடக்கிறது
கரூர்,
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, பேச்சு போட்டிகள் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
போட்டிகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022-2023-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 9 மணிக்கு கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு 3 பேர் மட்டும்...
இப்போட்டிகளில் கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 போட்டிகளுக்கும் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே தேர்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனுப்ப வேண்டும். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று போட்டி தொடங்குவதற்கு முன்பு மாணவ-மாணவிகள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.
பரிசுகள்
இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய விண்ணப்பத்தை பெற்று நிரப்பி போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் வழங்குதல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.