மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

Update: 2023-08-05 18:45 GMT

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

பாதுகாப்புக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழுக் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தினை கூட்டி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதன் தீர்மான நகலினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குழந்தைகள் இல்லம்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் இல்லம் நடத்துவோர் முறையான பதிவு பெற்றிருக்க வேண்டும். விடுதிகள் நடத்துவோர் மாவட்ட கலெக்டரிடம் உரிமம் பெற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், போதை பழக்கத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளை கண்டறிந்து குழந்தைகள் நலக்குழு மூலம் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்திடவேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளி செல்வதை உறுதி செய்திட வேண்டும். குழந்தை தொழிலாளர் பணி அமர்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

விழிப்புணர்வு

குழந்தை வேண்டுவோர் முறையாக தத்து எடுத்திடவும், வளர்ப்பு பராமரிப்பினை ஊக்குவித்திடவும் பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நீதித்துறை நடுவர் கலைவாணி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், குழந்தைகள் நலக்குழு தலைவர் வின்சென்ட்ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினிஸ்ரீதர், கமலஜோதி, மகேந்திரன், நகரசபை தலைவர் துர்காபரமேஸ்வரி, நன்னடத்தை அலுவலர் நடராசன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்