கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் காண, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 வயதுக்குட்பட்ட சிறந்த செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாணவர்கள் விளையாடும்போது சிந்தித்து திறம்பட விளையாட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கல்வி கற்பதோடு இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அறிவு திறனையும், உடற்வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டி இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள், மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை காண தகுதி பெறுவார்கள். நிகழ்ச்சியில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பழனி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆழ்வார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், புத்தந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.