பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-09-09 11:22 GMT

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூர போட்டியும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீடடர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும் நடத்தப்படுகிறது. போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி ஜார்ஜ் ரோடு, பெல் ஓட்டல், ரோச் பூங்கா, பீச் ரோடு ரெயில்வே கேட், துறைமுகம் ரவுண்டானா வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வர வேண்டும்.

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

விதிமுறைகள்

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த செலவில், இந்தியாவில் தயாராகும் சாதாரண சைக்கிளை கொண்டு வர வேண்டும். சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் வருகிற 15-ந் தேதி காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்குக்கு தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட வயது சான்றிதழுடன் வருகை தர வேண்டும். வயது சான்றிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சைக்கிள் போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துக்களுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்