மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவம் வினியோகம்

மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-07-21 18:56 GMT

மாதந்தோறும் ரூ.1,000

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் ரேஷன் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு, வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள், அரியலூர் மாவட்டத்தில் 466 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2 கட்டமாக சிறப்பு முகாம்கள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம்கள், முதற் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக 126 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக அரியலூர் தாலுகாவில் 163 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், செந்துறை தாலுகாவில் 74 ரேஷன் கடை அமைந்துள்ள பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 2-ம் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 156 ரேஷன் கடை அமைந்துள்ள பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் தாலுகாவில் 162 ரேஷன் கடைகள், ஆண்டிமடம் தாலுகாவில் 67 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

விண்ணப்பம்-டோக்கன்

மாவட்டங்களில் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்களை அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் வழங்கி வருகின்றனர். 2-வது நாளாக நேற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் நேரில் சென்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள், டோக்கன்களை வழங்கினர்.

விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தலைவிகள், அவற்றை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிடப்பட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்