சம்பள நிலுவைத்தொகை கேட்டு மனுத்தாக்கல் செய்த தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடியே 58 லட்சம் வினியோகம்

சம்பள நிலுவைத்தொகை கேட்டு மனுத்தாக்கல் செய்த தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடியே 58 லட்சம் வினியோகிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-21 20:28 GMT


மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் குறைந்தபட்ச சம்பள சட்ட கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் கமிஷனர் அறிவுறுத்தலின்படி, மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொழில்நிறுவனத்தில் சிறப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டதில், குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948-ன்படி, தொழில் வணிக நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி சம்பளம் வழங்காத பணியாளர்கள் தரப்பில் கேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 462 தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 3618 நிலுவைத்தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், 226 தொழிலாளர்களுகு ரூ.1 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரமும், சிவகங்கை மாவட்டத்தில் 157 தொழிலாளர்களுக்கு ரூ.36 லட்சத்து 67 ஆயிரத்து 372-ம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 98 தொழிலாளர்களுக்கு ரூ.52 லட்சத்து 24 ஆயிரத்து 151-ம் சம்பள நிலுவைத்தொகை வழங்கப்பட்டன. கடந்த ஒரு வருடத்தில் மதுரை தொழிலாளர் மண்டலத்தில் சம்பள முரண்பாடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில், 943 தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடியே 58 ஆயிரம் சம்பள நிலுவைத்தொகை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்