அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

Update: 2023-04-17 12:24 GMT

செறிவூட்டப்பட்ட அரிசி

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் மனு வழங்கிட வருகை தந்த பொதுமக்களிடையே, ரேஷன் கடைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவைகளில் செறிவூட்டப்பட்ட அரிசிகள் கலந்து வழங்கப்பட உள்ளதை அடுத்து செறிவூட்டப்பட்ட பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசிகளை பொதுமக்கள் பார்வையிடவும், செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை பொதுமக்கள் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை கலெக்டர் வளர்மதி பொதுமக்களுக்கு விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவினை பொதுமக்களுக்கு வழங்கி அதன் சத்துக்கள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த மாதம் முதல்

செறிவூட்டப்பட்ட அரிசி அதிக தாதுக்கள், அதிக வைட்டமின்கள் கொண்டதாக உள்ளது. இது ரத்த சோகையை தடுக்கிறது. போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் உதவுகின்றது. வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஏற்கனவே பயன்படுத்தப்படும் அரிசியின், அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் செய்முறைதான். ஆனால் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதிக சத்துக்கள் கொண்டதும் மற்றும் சிறந்ததாகவும் இருக்கும்.

இது அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக இதுபோன்று விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய். அட்டைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிகள் அடுத்த மாதம் (மே) முதல் வழங்கப்பட உள்ளது. இந்த அரிசியின் பயன்கள் குறித்து பொதுமக்கள் முறையாக தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். தற்போது பொதுமக்களிடையே நிலவும் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை களைய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே இதை முறையாக தெரிந்து கொண்டு இந்த அரிசிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து

இந்த அரிசிகள் ஏற்கனவே அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி சத்துணவு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்யும் விதமாக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் இதை எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200 பேருக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்த சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்