மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர்.

Update: 2023-07-20 22:54 GMT

சென்னை,

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக ஏற்கனவே 2023-2024 பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி வருகிற 24-ந்தேதி முதல் மற்றும் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கு முன் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.

வீடு, வீடாக விண்ணப்பம்...

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை நேற்று வீடு வீடாகச்சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினர். காலை மற்றும் பிற்பகல் என 2 வேளைகளிலும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர். அவர்களுக்கு உதவியாக இல்லம் தேடி கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களும் விண்ணப்பம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 24-ந்தேதி முதல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பொதுமக்கள் கொண்டு சென்று வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விவரங்களின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 உறுதிமொழிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில், ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண், சொந்த வீடா? வாடகை வீடா?, மின் இணைப்பு எண், வங்கி பெயர், வங்கிக்கிளையின் பெயர், வங்கிக்கணக்கு எண், குடும்ப விவரங்கள் போன்றவைகள் கேட்கப்பட்டுள்ளன.

சொந்த வீடு உள்ளது எனில் அரசு திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டதா? குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த நிலம் உள்ளதா? ஆம் எனில், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் உள்ளதா? அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளதா? குடும்ப உறுப்பினர் யாரிடமாவது கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் உள்ளதா? எனப்பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், 11 உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அதில் விண்ணப்பதாரர் கையொப்பம் கேட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணா பிறந்தநாளில்...

இதே போன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கும் டோக்கனில், டோக்கன் எண், தேதி, நேரம், இடம், கடையின் எண்/பெயர், அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், கிராமம்/தெரு போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய ஆவணங்களை முகாம்களுக்கு எடுத்து வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்கள் விவரங்களும் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்கள் 2 கட்டங்களாகப் பெறப்பட்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்