மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நேற்று நடந்தது.
இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-
வரலாற்று திரிபுதான் இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து. கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும். மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளை புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்படவேண்டும்.
தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு. இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப்பொருத்தமானது. நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல. அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்று பெருமைகளை பேசுகிறோம்.
கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது.
ஆற்றங்கரை நாகரிகம்
தமிழ்நாட்டில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தி உள்ளது. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து என கண்டறியப்பட்டு உள்ளது. 'தண் பொருநை' என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் 7 இடங்களில் இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளை தமிழக அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்றவற்றின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்கிறோம். உலகளாவிய நிறுவனங்களின் பரிசீலனைக்கு எங்களது கண்டுபிடிப்புகளை அனுப்பி வைத்து கேட்கிறோம். இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழக சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன்.
பெருமையை மீட்கும் அரசு
கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம். பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றை பற்றிய பெருமிதங்கள்.
இத்தகைய வரலாற்று உணர்வை, உண்மையான வரலாற்றை ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழக அரசின் கடமையாக நினைத்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று கருதுகிறோம். தமிழினத்தின், தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட கட்டிடக்கலை
வரலாறு என்பது அரசர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வெற்றிகளை பற்றி மட்டுமே பேசும் ஆவணமாக இருக்கக்கூடாது. வரலாறு, அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிக்க வேண்டும். இதுதான் எங்கள் பார்வை. திராவிட கட்டிடக்கலையினை பறைசாற்றும் வானுயர கோவில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம்.
அதேபோல் கீழடியில் ''ஆதன்'' என்றும் ''குவிரன்'' என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் பெருமிதம் கொள்கிறோம்.
இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு வழங்கினால் அதனையும் ஏற்று செயல்படுத்த இருக்கிறோம். வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டோர்
மாநாட்டில், அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, ரூபி மனோகரன், எஸ்.ஆர்.ராஜா, உயர் கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தா.கார்த்திகேயன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் பி.வில்சன், இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் கேசவன் வேலுதத், பொறுப்பு தலைவர் ஷீரின் மூஸ்வி, செயலாளர் மகாலட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைய காலத்தின் தேவை என்பது, வரலாற்று உணர்வை ஊட்டுதல் மற்றும் அறிவியல் பார்வையை உருவாக்குதல். வரலாற்றை படித்து என்ன ஆகப்போகிறது? அதை படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்துக்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றை படித்தாக வேண்டும். கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தை கணிக்க முடியும்.
அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அமைய வேண்டும். கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு அவர் பேசினார்.