தனியார் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு
வேலூர் புதிய பஸ்நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
வேலூர் புதிய பஸ்நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
தனியார் வாகனங்கள்
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக தனியார் வாகனங்கள், மற்றும் ஆட்டோக்கள் பஸ்நிலையத்தின் உள்ளே செல்கின்றன. சிலதனியார் கார்கள் கிரீன் சர்க்கிள் வழியாக காட்பாடி சாலைக்கு செல்லாமல், செல்லியம்மன் கோவில் அருகே பஸ்நிலையத்திற்குள் சென்று, சென்னை பஸ்கள் வரும் வழியில் எதிர் திசையில் செல்கின்றன. இதனால் மின்மயான சுற்றுச்சுவர் அருகே உள்ள பஸ்நிலையத்தின் பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
நெரிசல்
நேற்று இரவு தனியார் கார் ஒன்று பஸ்கள் செல்லும் பாதைக்கு எதிரில் சென்றதால் சென்னை பஸ் ஒன்று தொடர்ந்து நகர முடியாமல், சுவரில் மோதுவது போல் குறுகலான பாதையில் சிக்கியது. இதனால் நீண்ட நேரமாக வாகனங்கள் நெரிசலில் சிக்கியது.
தனியார் வாகனங்கள் செல்லியம்மன் கோவில் அருகில் இருந்து பஸ்நிலையத்தில் புகுந்து குறுக்கு வழியில் காட்பாடி சாலைக்கு செல்வதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.