12 வாகனங்களின் குறைகளை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம்

செய்யாறில் தனியார் பள்ளி பஸ், வேன்களை ஆய்வு செய்து, 12 வாகனங்களின் குறைகளை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவிட்டார்.

Update: 2023-05-18 15:47 GMT

செய்யாறு

செய்யாறில் தனியார் பள்ளி பஸ், வேன்களை ஆய்வு செய்து, 12 வாகனங்களின் குறைகளை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவிட்டார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

செய்யாறு, வெம்பாக்கம் மற்றும் வந்தவாசி ஆகிய 3 தாலுகாவில் 37 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் வேன் மற்றும் பஸ் மூலமாக மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட 3 தாலுகாக்களை சேர்ந்த 37 தனியார் பள்ளிகளின் 250 பஸ் மற்றும் வேன்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதில் சுமார் 185 வாகனங்கள் செய்யாறு அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி, மாவட்ட கல்வி துறையின் சார்பில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சம்பத் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

முதலுதவி பெட்டி

பல பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டியும், தீயணைப்பு கருவியும் இல்லாமல் இருப்பதைக் கண்டார்.

அப் பள்ளி வாகன டிரைவரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு வாகனத்தில் இருந்த முதலுதவி பெட்டி உட்பட மாறி மாறி எடுத்து வந்து ஆய்வு பஸ்சில் உதவியாளர்கள் வைப்பதை காண முடிந்தது.

ஒரே நாளில் இத்தனை வாகனங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுமா எனவும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களும் முறையாக ஆய்வு செய்து தகுதி சான்று வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

தகுதி நீக்கம்

வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தனியார் பள்ளி வாகனங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்து, குறைகளை நிவர்த்தி செய்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதன்படி வாகனத்தில் பாதுகாப்பற்ற இருக்கை மற்றும் டயர் உள்ளிட்ட பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி 12 வாகனங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டு சீரமைத்து மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்