நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே நிலத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்ற ஆட்டோ டிரைவருக்கு அதே பகுதியில் ஒரு ஏக்கர் ஐந்து சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்குபிரித்து தரக்கூறி அவரது உறவினர் வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் கருப்பசாமிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கருப்பசாமி, அவரது சகோதரர் பண்ணைக்காரன் மற்றும் அண்ணன் மகன் மகாராஜன் ஆகிய மூன்று பேரை வெள்ளைச்சாமி கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் வெள்ளைச்சாமி, அவரது மனைவி தங்கம் மற்றும் மகன்கள் முனியப்பன், பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.