பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல்

பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது.

Update: 2023-04-10 16:52 GMT

ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்காக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர். பின்னர் அந்தப் பணத்தை பிரிப்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த கொக்கரக்கோ என்கிற பிரசாந்த் (வயது 21), அவரது நண்பர்கள் ஹரி, விஜய், அசோக், வெங்கடேசன் ஆகியோர் பணத்தை தர மறுத்து ஸ்ரீரங்கம் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (23), மாதவன் (23) ரெக்ஸ் என்கிற ரெட்டி (20) ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஷுக்கு இடது கையிலும், மாதவனுக்கு தலையிலும், ரெக்ஸ் என்கிற ரெட்டிக்கு தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் கொக்கரக்கோ என்கிற பிரசாந்த் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்