மைதானத்தில் தகராறு; 2 பேருக்கு கத்திக்குத்து

மைதானத்தில் தகராறு; 2 பேருக்கு கத்திக்குத்து

Update: 2023-01-17 18:45 GMT

கோவை

முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறுகோஷ்டி மோதலாக மாறி 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-

புதிய கார்

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருடைய மகன் அரவிந்த் (வயது30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கார் ஒன்றை வாங்கினார். தனது நண்பர்களிடம் காண்பிப்பதற்காக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு மைதானத்துக்கு காருடன் சென்றார். அங்கு அவருடைய நண்பர்கள் சரவணகுமார், சீனிவாசபிரபு, அரவிந்தன் ஆகியோர் வந்து இருந்தனர். புதிய காரை மைதானத்தில் ஓட்டிப்பார்த்தனர்.

அப்போது அங்கு காந்திபுரத்தை சேர்ந்த கார்த்திக் பாபு என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்தது.

2 பேருக்கு கத்திக்குத்து

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கார்த்திக் பாபு மீது அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அரவிந்த் மீது கார்த்திக் பாபு ஆத்திரத்தில் இருந்தார்.

இந்தநிலையில் ஆர்.எஸ்.புரம் மைதானத்தில் வைத்து மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கார்த்திக் பாபு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அரவிந்தை குத்த முயன்றார். இதை தடுத்தபோது அரவிந்தின் இடது கை மற்றும் விரல்களில் கத்திக்குத்து ஏற்பட்டு ரத்தம் வழிந்து ஓடியது. இதனை தடுக்க முயன்ற அரவிந்தின் நண்பர் சரவணகுமாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

ஆத்திரம் தீராமல் சரவணகுமாரின் தலையிலும் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் கார்த்திக் பாபுவை பிடிக்க முயன்றனர். அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

4 பேர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்து உயிருக்கு போராடிய அரவிந்த், சரவணகுமார் ஆகியோரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பாபு (வயது38), பேரூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்த அஜித்குமார் (22), கள்ளிமேட்டை சேர்ந்த நடேஷ்குமார் (37), பி.என்.புதூரை சேர்ந்த ஸ்ரீதர் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜீவா என்பவரை தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்