அரசியல் கட்சியினர் இடையே தகராறு
ஊத்தங்கரை மாவட்ட நீதிமன்றம் அருகில் அரசியல் கட்சி கொடிக்கம்பம் நடுவதற்கு இடம் பிடிப்பதில் அரசியல் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதை பேரூராட்சி அலுவலர்கள் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை மாவட்ட நீதிமன்றம் அருகில்அரசியல் கட்சி கொடிக்கம்பம் நடுவதற்கு இடம் பிடிப்பதில் அரசியல் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதை பேரூராட்சி அலுவலர்கள் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
கொடிக்கம்பம்
ஊத்தங்கரை மாவட்ட நீதிமன்றம் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கொடிக்கம்பம் நடும் பணியில் நேற்று காலையில் ஈடுபட்டனர்.
அப்போது கொடிக்கம்பம் நட இடம் பிடிப்பதில் அரசியல் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் அமானுல்லா மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என்று தெரிவித்தனர்.
பதற்றம்
தொடர்ந்து பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை அங்கிருந்து அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசியல் கட்சியினர் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு மற்றும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கூறுகையில் இந்த இடத்தில் மாவட்ட நீதிமன்றம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளதால் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்றனர். இந்த இடத்தில் எந்த கட்சி கொடிக்கம்பமும் நடக்கூடாது. இந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட உள்ளது என்று கூறினார்.