காஞ்சீபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காஞ்சீபுரம் நகரத்தின் மைய பகுதியில் வேகவதி ஆற்றங்கரையில் குடிசைமாற்று வாரிய வீடுகளிலும், தனி வீடுகளிலும் வாழ்ந்து வரும் 3 ஆயிரத்து 524 குடும்பங்களில் 600 குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றி கீழ்க்கதிர்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அனுப்ப காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. 52 ஆண்டுகளுக்கும் மேலாக வேகவதி ஆற்றங்கரையில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது. வேகவதி ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் நெசவுத்தொழில் செய்பவர்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்கள். அவர்களுக்கு புதிய இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்காது.
மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிக்கு மாற்றுவது என்பது, தண்ணீரில் வாழும் மீன்களை தரையில் வீசி வாழ சொல்வதற்கு ஒப்பானது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, காஞ்சீபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு அரசு ஆணையிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.