புதுமண்டபத்தில் கடைகள் முழுவதும் அகற்றம்
பல ஆண்டு காலமாக அகற்றப்படாமல் இருந்த புதுமண்டபத்தில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டது. இதில் ஈடுபட்ட கோவில் பணியாளர்களின் நடவடிக்கைக்கு பக்தர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே கீழசித்திரை வீதியில் அமைந்துள்ளது புதுமண்டபம். இங்குள்ள பெரும்பாலான கடைகள் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் 32 கடைக்காரர்கள் காலி செய்ய மறுத்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த விழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியுடன் மாலை நேரத்தில் இங்கு வந்து, மண்டபத்தின் உள்ளே 3 முறை வலம் வந்து மேடையில் எழுந்தருளுவார்.
இந்த திருவிழாவையொட்டி மீதம் உள்ள கடைகளை அகற்றும் பணிகளை நேற்று முன்தினம் ேகாவில் நிர்வாகம் தொடங்கியது.அதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் நேற்று கடைகளை அகற்ற உள்ளதாகவும், கடைகளில் உள்ள பொருட்களை எடுக்காவிட்டால் கோவில் நிர்வாகம் அந்த பொருட்களை வெளியே எடுத்து வைக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை மேற்பார்வையில் மீனாட்சி கோவில் துணை கமிஷனர் அருணாசலம் தலைமையில் மீனாட்சி கோவில் பணியாளர்கள் அனைவரும் நேற்று காலை 6 மணிக்கு புதுமண்டபத்திற்கு வந்தனர்.
அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் பூட்டுகளை உடைத்து பொருட்களை அகற்ற தொடங்கினர். அதை பார்த்த கடைக்காரர்கள் அவர்களே முன்வந்து கடைகளை காலி செய்ய தொடங்கினர். அவ்வாறு 32 கடைகளையும் அகற்றும் பணி காலை தொடங்கி இரவு வரை நடந்தது. அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையால் கோவில் பணியாளர்களுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.