திருவாதவூரில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி -அரசாணையில் இடம்பெறாததை சுட்டிக்காட்டி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருவாதவூரில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
திருவாதவூரில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்ட வழக்கை தள்ளுபடிசெய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மஞ்சுவிரட்டு
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த குமரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கான கமிட்டியை ஏற்படுத்தும் அதிகாரம் மாவட்ட கலெக்டருக்குதான் உள்ளது.
இந்த நிலையில் திருவாதவூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டியை வருகிற 29-ந் தேதி நடத்துவதற்காக மதுரை மாவட்ட கலெக்டர், திருவாதவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இந்த போட்டிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பான உத்தரவை ரத்து செய்து திருவாதவூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனு தள்ளுபடி
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊர்களை தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறுவது அவசியம், என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான அரசாணையில் திருவாரூர் இடம்பெறாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர். தேவைப்பட்டால் மனுதாரர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.