திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

திருவண்ணாமலை கிரிவல பாதையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-14 22:04 GMT

சென்னை,

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜி.கார்த்திக். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஜீவா கல்வி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நிலத்துக்கு அருகே உள்ள கால்வாய் நிலத்தை அறக்கட்டளை ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைக்க உள்ளது. கிரிவல பாதையில் இந்த சிலை அமைப்பதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். நீர் போக்குவரத்து பாதிக்கப்படும். அதனால் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தடை விதிப்பு

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தது. இந்த மனுவுக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய திருவண்ணாமலை கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சிலை அமைக்கப்படும் நிலம் பட்டா நிலம் என்று கலெக்டர் மற்றும் அறக்கட்டளை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி அவரது சிலையை திறக்க உள்ளதால், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அறக்கட்டளை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தள்ளுபடி

ஆனால் தடையை நீக்க மறுத்த நீதிபதிகள், விரிவான விசாரணைக்காக வழக்கை தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. "சிலை அமைக்கப்பட உள்ள நிலத்துக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று கூறினர்.

இதையடுத்து இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்