கேரள-தமிழக எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பறவை காய்ச்சல்
கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பண்ணையில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து வரும் கறிக்கோழி வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிருமி நாசினி
கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் பண்ணைகளில் வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க வீரப்பகவுண்டன்புதூர், ஜமீன்காளியாபுரம், வடக்குக்காடு, நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், செமனாம்பதி ஆகிய சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் கேரளாவில் இருந்து வரும் கோழி வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. பண்ணைகளில் இருந்து இந்த காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. வாகனங்கள் மூலம் வர வாய்ப்பு குறைவு. இருப்பினும் கேரளாவில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனவே மறு உத்தரவு வரும் வரை கேரள எல்லையில் நோய் தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டன் புதூர் போலீஸ் சோதனைச்சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி அமைத்து கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாத்து, கோழி, கோழித் தீவனம், முட்டை போன்ற பறவைகள் சம்பந்தமாக வரும் வாகனங்களை தமிழகத்திற்குள் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினர் அனுமதிக்காமல் அவை கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கவுசிநிஷா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துசாமி, ஏசுதாஸ், எட்வர்டு தங்கம் உள்ளிட்டோர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.