பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல்

பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

Update: 2023-06-23 19:15 GMT

பொறையாறு;

பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில், பரசலூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லாடை, திருவிளையாட்டம், கொத்தங்குடி, அரசூர், சங்கரன்பந்தல், இலுப்பூர் திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, பொறையாறு, திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.செம்பனார்கோவில் வட்டார பகுதியில் மட்டும் 2ஆயிரத்து 100ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவுப்பூச்சி தாக்குதல்

தற்போது பூ பூத்து, காய் காய்த்து வெடித்து விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர். தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை வளிமண்டல சுழற்சி காரணமாக பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளது. மாவுப்பூச்சியில் பப்பாளி மாவுப்பூச்சி, இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பருத்தி மாவுப்பூச்சி, இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி, வால் மாவுப்பூச்சி ஆகியவை மிக முக்கியமான வையாகும். மாவுப்பூச்சியை சுற்றியுள்ள வெள்ளை நிற மெழுகு படலம் பஞ்சுபோல் அடர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சி கூட்டங்கள் இலைகள் இளம் தண்டுகளில் பரவிக் காணப்படுகிறது.

டிரோன் மூலம்...

இதன் காரணமாக பருத்தி மகசூல் குறைந்து விடும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வேளாண் குழுவினர் நல்லாடை பகுதிக்கு சென்று மாவு பூச்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினர்.மேலும் டிரோன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பருத்தி செடிகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்