9-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே பெரிய கண்மாயில் 9-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தமிழர்களின் நீர்மேலாண்மை வியப்பை அளிக்கிறது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே பெரிய கண்மாயில் 9-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தமிழர்களின் நீர்மேலாண்மை வியப்பை அளிக்கிறது.
ஆய்வு
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தமிழியல் ஆய்வாளருமான முனீஸ்வரன், வரலாற்று ஆய்வாளர் அருள் சந்திரன் இணைந்து திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் பெரிய கண்மாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது இரட்டை துளையுடன் குமிழிதூம்பு எழுத்து இருப்பதை கண்டறிந்தனர். மைபடி எடுத்து அதை ஆய்வு செய்தபோது கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு என கண்டறியப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகம் வேளாண்மை செய்வதற்கு ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளை உருவாக்கி அறிவியல் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்திய குமிழித்தூம்பு மூலம் பாசனம் செய்தது வியப்பாகத்தான் இருக்கிறது.
குமிழித்தூம்பு
ஏரி, குளம் கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழைநீர், வாய்க்கால், ஓடைகள் வழியாக நீர்வரும்போது நீரோடு களிம்பும் வண்டலும் சேர்ந்து வருவது நீர்நிலைகளில் தூர்ந்து போவதற்கு முக்கிய காரணம். பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடும்போது குமிழிகள் ஏரிக்கரையில் மதகு போல் இருப்பதில்லை.
ஏரிக்கரைகளில் இருந்து சுமார் 200 முதல் 300 அடிகள் தள்ளி ஏரியின் உட்பகுதியில் இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றில் அளவை பொறுத்து குமிழிகள் எண்ணிக்கை கூடும். ஏரியின் தரை மட்டத்தில் வலிமையான கல் தளம் அதன் அடியில் கருங்கற்களால் ஆன தொட்டி அமைத்து மேற்படி நீர் போவதற்கு பெரிய நீரோடித்துளை உருவாக்கி சுரங்க கால்வாய் மூலம் ஏரிக்கும், வெளியே இருக்கும் பாசன கால்வாய் இணைத்து துளையிட்டு இருக்கும். பாசனத்திற்கு நீர் தேவைக்கேற்ப குறைக்கவும் கூட்டவும் தூம்பு கல்லை பயன்படுத்தினார்கள். தூம்பு கல்லை மேலும் கீழும் இயக்குமாறு அமைக்கப்பட்டு உள்ளது.
நீர்மேலாண்மை
இந்த பாசனத்துக்கு நீரை திறக்க வலிமையானவர்கள் நீந்தி சென்று தூம்புக்கல்லை தூக்குவார்கள். அப்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அங்குள்ள துளை வழியாக வண்டல், களிம்பு நீர் வேகமாக வெளியேறும். நீரோடி துளை வழியாக 80 சதவீதம் நல்ல தண்ணீரும், 20 சதவீதம் மண் கூழ் வெளியேறுவதால் பயிர்களுக்கு சுத்தமாக இருக்கும். அங்குள்ள கல்வெட்டு மூலம் இந்த நீர்மேலாண்மை தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.