பல்லவர்கால சண்டிகேஸ்வரர் சிலை கண்டெடுப்பு

விருத்தாசலம் அருகே பல்லவர்கால சண்டிகேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதை பக்தர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

Update: 2023-07-18 18:45 GMT

விருத்தாசலம்

விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாலையூர் கிராமத்தில் உள்ள குளக்கரை அருகே, சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் புதைந்த நிலையில் காணப்பட்டது. நேற்று கோவை அரன் பணி அறக்கட்டளையை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து அந்த சிவலிங்கத்தை தோண்டி எடுத்தனர். அப்போது 6½ அடி உயரம் உள்ள 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம் என்பது தொியவந்தது. மேலும் இத்துடன் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கள் கால சண்டிகேஸ்வரர் சிற்பம் 2 அடி உயரத்தில் கண்டெடுக்கப்பட்டது. சண்டிகேஸ்வரர் சிலையை வைத்து பார்க்கும்போது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடத்தில் பெரிய சிவாலயம் இருந்திருக்க கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கோவை அரன் பணி அறக்கட்டளையினர் உடனடியாக நந்தி, பலிபீடம் ஆகியவற்றை வரவழைத்து அங்கு பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்தனர். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் ஓம் நமசிவாய என்று பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். இது குறித்து அரன் பணி அறக்கட்டளை சிவனடியார் சிவசங்கர் கூறுகையில் வெட்ட வெளியில் வழிபாடு இன்றி இருக்கும் சிவலிங்கங்களை எடுத்து பிரதிஷ்டை செய்யும் பணியை தமிழ்நாடு முழுதும் செய்து வருகிறோம். மேலப்பாலையூர் கிராமத்தில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் அந்த சிலையை தோண்டி எடுத்து, புதிய நந்தி அமைத்து பிரதிஷ்டை செய்து கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்