ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெளிவந்த அதிசய சுவர் - தொல்லியல் அதிகாரிகள் மகிழ்ச்சி...!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட அதிசய சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 13:26 GMT

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க நெற்றிப்பட்டயம்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு அகழாய்வு பணியில் 30 சென்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது.1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியோ அகழாய்வு செய்த போது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணி நடந்தது. அந்த அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் தற்போது நடந்து வரும் அகழாய்வு பணியில் 120 வருடங்களுக்கு பிறகு இந்த தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது.

சங்க கால வாழ்விடம்

இந்நிலையில் ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் அருகே சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில் இரண்டு பகுதிகளில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே 3,200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து ஆங்கிலேயர் காலம் வரை இந்த பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இந்த அகழாய்வு பணியில் கிடைத்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்க கால வாழ்விடப்பகுதி மற்றும் சங்க கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்