பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடு ஓடுகள் கண்டுபிடிப்பு
பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடு ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்று பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் களஆய்வு மேற்கொண்டார். அப்போது பெருங்கற்காலத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கீறல் குறியீடு ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்று கரைப்பகுதியில் கருப்பு மற்றும் சிவப்புநிற பானை ஓடுகள் சிதைந்த நிலையில் கிடைத்தன. அந்த ஓடுகளை ஆய்வு செய்தபோது அதில் ஏணி வடிவ குறியீடு, நட்சத்திர வடிவ குறியீடு, சூலவடிவ குறியீடு, முக்கோண வடிவ குறியீடு, தமிழ் எழுத்து போன்ற 15-க்கும் மேற்பட்ட குறியீடுகள் மற்றும் பெயிண்டிங் பானை ஓடுகள், கெண்டிமூக்கி, இரும்புக் கழிவு, இரும்புத்துண்டுகள் கண்டறியப்பட்டன.
புதிய கற்காலத்தை தொடர்ந்து பெருங்கற்காலத்தில் தான் மக்கள் அதிக அளவு மண்பாண்டங்களை பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்கள் காலத்தில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தீட்டிய மட்கலன்கள், கருப்பு மட்கலன்கள் போன்றவற்றை உற்பத்தி செய்துள்ளனர். இதுபோன்ற பானைகளில் தான் அதிக அளவு குறியீடுகள் காணப்படுகிறது. இதுபோல குறியீடு பொறித்த பானை ஓடுகள் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி, கொற்கை, வல்லம், உறையூர் போன்ற பகுதிகளில் அதிக அளவு கிடைத்துள்ளது. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளில் 75 சதவீதம் குறியீடுகள் தமிழகத்தில் தான் அதிகளவில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மேற்கொண்ட பெரும்பாலான அகழ்வாய்வுகளில் சேகரிக்கப்பட்ட குறியீடுகள் ஒன்றோடு ஒன்று ஒற்றுப்போகின்றன. இக்குறியீடுகள் பெருங்கற்கால மற்றும் இரும்பு கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எழுத்துகளாக உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை குறியீடுகள் வரி வடிவத்திற்கு முன்னோடி என்பதுடன், பெருங்கற்காலத்தில் இக்குறியீடுகளே கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருந்துள்ளதை காட்டுகின்றன. உளுந்தாம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடு ஓடுகள் பெருங்கற்காலத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றார்.