உசிலம்பட்டி அருகே வீரத்தை பறை சாற்றும் 2 நடுக்கற்கள் கண்டெடுப்பு

உசிலம்பட்டி அருகே வீரத்தை பறை சாற்றும் 2 நடுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2023-08-04 20:03 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே வீரத்தை பறை சாற்றும் 2 நடுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொல்லியல் ஆய்வு

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில் 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட நடுகல்லும், 5 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்ட நடுகற்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் இந்த இரு நடுகற்களையும் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர்.,

இந்த ஆய்வில் 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட நடுகல்லில் வீரன் ஒருவன் முன்னங்கால்களை தூக்கிய நிலையில் உள்ள குதிரையில் அமர்ந்து ஒரு கையில் கயிறு, மறுகையில் வாள் ஏந்தி சண்டையிடுவது போன்றும், குதிரையின் காலடியில் வீரன் ஒருவன் தனது வாளால் குதிரையின் வயிற்றில் குத்துவது போன்றும், வீரனின் நாய் குதிரையின் அடி வயிற்றை கடிப்பது போன்றும், அதன் அருகிலேயே பெண் உருவம் தண்ணீர் குடத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த வீரனுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மற்றொரு நடுக்கல்

இதே போன்று 5 அடி உயரம், 1½ அடி அகலம் கொண்ட நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பை செலுத்த தயாராக உள்ளது போன்றும், வீரன் அருகே பெண் உருவம் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 நடுகற்களின் மேற்பகுதியில் கோபுர வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக இந்த 2 நடுகற்களும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது அந்த வீரர்களின் வீரத்தை பறை சாற்றுவதாகவும் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களாக இந்த இரு நடுகற்களும் இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்