திறமையை கண்டறிந்து குழந்தைகளை பெற்றோர் ஊக்கப்படுத்த கலெக்டர் செந்தில்ராஜ்யோசனை

திறமையை கண்டறிந்து குழந்தைகளை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-20 15:09 GMT

குழந்தைகளின் திறமையை கண்டறிந்து பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

சதுரங்க போட்டி

44-வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் பார்வையாளாராக பங்கேற்பவர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜோ பிரகாஷ் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி பொருளாளர் முத்துசெல்வம், முதல்வர் முரளிதரன், முன்னாள் முதல்வர் நாகராஜன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் நிக்சன் சாம்ராஜ் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் சதுரங்க கழக செயலாளர் ஜிம்ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

ஊக்கம்

அப்போது, 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் பார்வையாளராக பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் படிப்பிலும், விளையாட்டு போட்டியிலும் சாதிப்பதற்கு பெற்றோரின் பங்கு முக்கியமானது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அவற்றில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து உள்ளது. ஒவ்வொரு போட்டியையும் அரசு ஊக்குவிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதியில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்கி போட்டியில் நிறைய பேர் சிறந்து விளங்குகிறார்கள். அகில இந்திய போட்டி கோவில்பட்டியில் 2 முறை நடந்து உள்ளது. காயல்பட்டினத்தில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் கூடைப்பந்துவிளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்