பெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை

திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைத்த பெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Update: 2022-05-22 18:05 GMT

பெரம்பலூர்,

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கடந்த 19-ந்தேதி பேனர் வைத்த போலீஸ் ஏட்டு கதிரவன் (வயது 41) மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கதிரவன் மீது ஒரு பெண் போலீசை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததற்காக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. அதன் காரணமாக 2020-ல் மேற்படி கதிரவன் வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். மீண்டும் அவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு கடந்த ஆண்டு பணி மாறுதல் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் இருந்து போலீஸ் ஏட்டுகளை போலீஸ் நிலையங்களுக்கு மாற்றும் பொழுது, கதிரவன் பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அதனடிப்படையில் இவர் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி அன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், தற்போது வரை கதிரவன் மேற்படி பாடாலூர் போலீஸ் நிலையத்தில் அறிக்கை செய்யாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக, இவர் விட்டோடியாக கருதப்பட்டு அவ்வாணையும் இவருக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது கதிரவன் மீது விட்டோடியாக இருப்பதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்