தென்மேற்கு பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை குழு

தென்மேற்கு பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.;

Update:2022-06-28 02:19 IST

தென்மேற்கு பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் பேசியதாவது:-

தென்மேற்கு பருவமழை காலங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுக்க முடியும்.

பேரிடர் மேலாண்மை குழு

அந்தவகையில் இப்பகுதிகளுக்கு துணை கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. தாலுகா அளவில் தாசில்தார் தலைமையில் வட்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மேலும் பாதிப்புக்கான உரிய நிவாரண பணிகளை அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாக்கடை உள்ளிட்ட நீர் வழிகளை தூர்வாரவும், சிதிலமடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்தவும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைகளை பலப்படுத்தவும், அவசர காலங்களில் தேவைப்படும் பொக்லைன் எந்திரம், மரம் அறுக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலைகளில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பேரிடர் தொடர்பான தகவல்களை அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து உதவி கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வெள்ள கட்டுப்பாட்டு அறை உரிய பணியாளர்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பாலச்சந்தர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்