மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதோர் நலச்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-28 18:45 GMT

தர்ணா போராட்டம்

காது கேளாத வாய்பேச முடியாத நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர் நியமனம் செய்ய வேண்டும்.

அரசு நலத்திட்ட உதவியான தையல் எந்திரம், காதொலி கருவி, வங்கி கடன் உதவி, செல்போன் ஆகியவற்றை ஒளிவுமறைவு இன்றி முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

வீட்டுமனை பட்டா

இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்ட பதிவு சிறப்பு முகாமை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

காது கேளாதவர்களின் குறைகளை கேட்டறிந்து, குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். காலியாக உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்