விழுப்புரம் புதிய பஸ் நிலையஆவின் பாலகத்துக்குள் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா

விழுப்புரம் புதிய பஸ் நிலைய ஆவின் பாலகத்துக்குள் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-22 18:45 GMT


விக்கிரவாண்டி தாலுகா பூங்குணத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. மாற்றுத்திறனாளியான இவர் உரிமம் பெற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை, புதுச்சேரி பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆவின் அதிகாரிகள் இக்கடையில் ஆய்வு செய்தபோது குடிதண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதை அறிந்து அவ்வாறு விற்கக்கூடாது என்று எச்சரித்தனர். அதன் பிறகு 3 மாதங்கள் கழித்து அக்கடையின் உரிமத்தை திடீரென ரத்து செய்துவிட்டு வேறொரு மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அண்ணாமலை, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் அண்ணாமலைக்கு சாதகமாக அவரே கடையை நடத்தலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் நேற்று ஆவின் அதிகாரிகள் திடீரென அக்கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். இதை கண்டித்து அண்ணாமலை மற்றும் சக மாற்றுத்திறனாளிகள் கடையினுள் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், எடுத்துச்சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்