திண்டுக்கல்-காரைக்குடி இடையே ரெயில் பாதை அமைக்கப்படுமா?
திண்டுக்கல்-காரைக்குடி இடையே ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தொலைதூர பயணம் மேற்கொள்ளப்போகிறோம் என்றாலே நம் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அதிலும், சுற்றுலாவுக்கான பயணம், இயற்கையான சூழலை அனுபவித்தபடி பயணம் என்றால் சொல்லவே வேண்டாம், குதூகலமாக நாம் புறப்பட்டு சென்றுவிடுவோம். மேலும் தொலைதூர பயணத்துக்காக நாம் பயன்படுத்தும் வாகனமும், அந்த பயணத்தின் போது நமக்கு கிடைக்கும் அனுபவமும் மிக முக்கியமானது.
நீண்ட நேர கார் மற்றும் பஸ் பயணம் என்பது சிறிது சலிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. போர்டிங் பாஸ் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் விமானத்தில் பயணம் செய்வது கூட சிறிது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் ரெயிலில் தொலைதூர பயணம் என்றால் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்யும்.
ஏனென்றால் ரெயில் பயண அனுபவங்களை நம்மால் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. இயற்கையின் எழிலோடு இணைந்து செல்லும் ரெயில் பயணங்களும், அப்போது கிடைக்கும் அனுபவமும் மனதுக்கு எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும். நாம் வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை கொடுப்பதால் நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களின் முதல் தேர்வாக ரெயில்களே இருக்கின்றன.
மேலும் வியாபாரிகள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். ஆனால் சில ஊர்களை இணைக்கும் வகையில் ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்படாததால் அந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் தங்கள் ஊரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ரெயில் பாதை அமைக்கப்படாதா? என்ற ஏக்கத்தில் ஆண்டு கணக்கில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த வணிகர்களும், பொதுமக்களும் காத்திருக்கும் நிலை உள்ளது.
வரப்பிரசாதம்
அதன்படி திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடிக்கு இதுவரை ரெயில் பாதை அமைக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் காரைக்குடிக்கு செல்ல விரும்புபவர்கள், ரெயிலில் திருச்சி சென்று அங்கிருந்து காரைக்குடிக்கு செல்லும் நிலை தான் தற்போது வரை உள்ளது. இதற்காக அவர்கள் 4 மணி நேரத்துக்கும் மேல் ரெயிலில் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால் திண்டுக்கல்லில் இருந்து நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, பிள்ளையார்பட்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டால் 2 மணி நேரத்துக்குள் காரைக்குடியை பயணிகள் அடைந்துவிடலாம். இந்த வழித்தடத்தில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு தான் ரெயில் பாதை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்டுவிட்டால் காரைக்குடியில் இருந்து கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு வேலைக்காகவும், வியாபாரத்துக்காகவும் செல்பவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துவிடும்.
பின்னடைவு
இதுகுறித்து நத்தம், கோபால்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பூபதி (வர்த்தக சங்க தலைவர், கோபால்பட்டி):- மாநில தலைநகரான சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அனைத்து ரெயில்களும் திண்டுக்கல் வழியாக தான் சென்று வருகின்றன. ஆனால் திண்டுக்கலில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காரைக்குடிக்கு செல்ல இதுவரை ரெயில் பாதை அமைக்கப்படவில்லை.
இதனால் வியாபாரிகளுக்கு வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நத்தம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் திண்டுக்கல்-காரைக்குடி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை கானல் நீராகவே தற்போது வரை உள்ளது.
அரசுக்கு கூடுதல் வருமானம்
குமார் (தனியார் நிறுவன ஊழியர், கோபால்பட்டி):- காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை பகுதிகளில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் செல்கின்றனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயில் சேவை இல்லாததால் அவர்கள் பஸ், கார்களில் பல மணி நேரம் பயணம் செய்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் இருந்து காரைக்குடி செட்டிநாடு அரண்மனையை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வாடகை வாகனங்களில் செல்கின்றனர். எனவே திண்டுக்கல்-காரைக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டால் முருக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
ஹரிகரன் (மாங்காய் வியாபாரி, வேம்பார்பட்டி):- விவசாய பொருட்களை சரக்கு ரெயிலில் கொண்டு செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. நத்தம், கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சலாகும் தேய்ங்காய், மாங்காய் உள்ளிட்டவற்றை காரைக்குடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் சரக்கு லாரிகள் மூலமே கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்பி வைக்க வேண்டும். அதுவே ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் சரக்கு கட்டணம் பாதியாக குறையும்.
50 ஆண்டு கால கனவு
ராஜேந்திரன் (கோபால்பட்டி, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட துணை தலைவர்):- திண்டுக்கல்-காரைக்குடி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது நத்தம், கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு ஆகும். சித்தன், கார்வேந்தன் ஆகியோர் எம்.பி.க்களாக இருந்த போது வணிகர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், விவசாயிகள் சார்பில் இந்த கோரிக்கை தொடர்பாக பலமுறை மனு கொடுத்தோம். அதேபோல் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போதும் இதே கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தோம். ஆனாலும் எங்கள் பகுதி மக்களின் கனவு இதுவரை நனவாகவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, மதுரை-தூத்துக்குடி, நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ரெயில் பாதை திட்டங்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. இந்த ரெயில் பாதை திட்டங்களை நிறைவேற்றவே தற்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நிலுவையில் உள்ள ரெயில் பாதை திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் திண்டுக்கல்-காரைக்குடி, திண்டுக்கல்-குமுளி உள்ளிட்ட புதிய ரெயில் பாதை திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.