திண்டுக்கல் ஐ லியோனி மீது போலீசில் புகார்
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் ஐ லியோனி மீது தாழ்த்தப்பட்டோர் குறித்து தரக்குறைவாக பேசியதாக புகார் அளித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை:
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி பட்டியல் இனத்தவரை இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இவருடைய பேச்சுக்கு சமூக செயற்பாட்டாளர்கள், தலித் செயற்பாட்டாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைவர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் என்ற பொருளில் சொல்லப்பட்டது ஒழிய எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல' என பதில் அளித்தார்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தரக்குறைவாக பேசியதாக ஐ லியோனி மீது உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் தொகுதி செயலாளர் ஏழுமலை தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் தாழ்த்தப்பட்டோர் குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் திண்டுக்கல் ஐ லியோனி தரக்குறைவாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது நகர அமைப்பாளர் பாண்டியன் மற்றும் உளுந்தூர்பேட்டை நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல் ஐ லியோனி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.