'தினத்தந்தி' செய்தி எதிரொலி: தினையாகுடி பகுதியில் கல்லணை கால்வாய் கரைகள் சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தினையாகுடி பகுதியில் கல்லணை கால்வாய் கரைகள் சீரமைக்கப்பட்டன. மேலும் கரையோரம் வளர்ந்திருந்த கருவேல மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.;
கல்லணை கால்வாய்
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாகுடி ஊராட்சியில் கல்லணை கால்வாய் 1936-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கல்லணை கால்வாய் நாகுடி ஊராட்சியில் கிழக்கு மற்றும் தெற்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அத்தாணி வழியாக கிழக்கு கடற்கரை சாலையோரமாக உள்ள கட்டுமாவடிக்கும், தெற்கு நோக்கி செல்லும் கல்லணை கால்வாய் மும்பாலை கிராமம் வரை செல்லக்கூடியது. இந்த கால்வாய் காவிரி ஆற்றின் கிளை கால்வாய் ஆகும். இந்த கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். கோடை காலங்களில் வறண்டு காணப்படும். இந்த கால்வாயின் இருபுறமும் கரைகளை வலுப்படுத்த வேண்டும், கரையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கல்லணை கால்வாய் பாசனத்தாரர் மற்றும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 7-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
கருவேல மரங்கள் அகற்றம்
இதையடுத்து, தினையாக்குடி ஊராட்சி சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் தினையாகுடி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் சீரமைக்கப்பட்டது. மேலும் கரையோரம் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதையடுத்து, செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் கால்வாய் பாசனத்தாரர், விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.