தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவில் போதிய வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாளையம்பட்டி.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் எண்ணற்ற நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் தண்ணீரும் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் நீர்நிலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், சிவகாசி.
ஒலி மாசுபாடு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. விழாவில் சிலர் அரசின் உத்தரவை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதுடன் ஒலி மாசுபாடும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேரி தமிழ்ச்செல்வி, வத்திராயிருப்பு.
போக்குவரத்து இடையூறு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்திச் செல்வதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ்,காரியாபட்டி.
நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரம் ஊராட்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுகிறது. அதேபோல ஒரு சில பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.