தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் சிரமம்
விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி 5-வது வார்டில் அமைத்துள்ள சட்டிக்கிணறு கிராமத்தின் தெருக்களில் சாலை அமைப்பதற்கு கற்களை மட்டும் நிரப்பிவிட்டு நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் குழந்தைகளும் அவ்வழியே நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துப்பாண்டி, மேலராஜகுலராமன்.
தடுமாறும் வாகன ஓட்டிகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகர் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள்.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், சாத்தூர்.
நோய் தாக்கும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அச்சம்தவிர்த்தான் கீழத்தெருவில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கழிவுநீர் தேங்கி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் டெங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அச்சம்தவிர்த்தான்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் இருந்து எட்டூர்வட்டம் வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அகலப்படுத்தி அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், மேட்டமலை.
பஸ்வசதி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பொிதும் சிரமப்படுகின்றனர். ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், திருச்சுழி.