தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் சுந்தரபாண்டியம் வடக்கில் உள்ள செங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், சுந்தரபாண்டியம்.
வேகத்தடை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலவநத்தம் தெற்குப்பட்டி மெட்டுக்குண்டு-குல்லூர்சந்தை பிரிவு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ், பாலவநத்தம்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகரில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தொட்டி அருகே மும்முனை மின் மோட்டார் இயக்க சுவிட்ச் மற்றும் அது வைக்கப்பட்டுள்ள பெட்டி கதவுகள் இல்லாமல் திறந்த நிலையில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மட்டுமே உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் மோட்டார் சுவிட்ச்சை உயரமாக வைத்து கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் பள்ளி உள்ளதால் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி, முகவூர்.
விவசாயிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆலடிபட்டியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை பழுதுநீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவுன்மோகன், திருச்சுழி.