தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்வசதி
விருதுநகரில் இருந்து மதுரைக்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கிருந்து பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வத்திராயிருப்பு.
கொசுக்கள் ெதால்லை
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள் இதனால் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
ேபாக்குவரத்திற்கு இடையூறு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில் மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயராஜ், சிவகாசி.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா செட்டியார்பட்டி பேரூராட்சி 10-வது வார்டு காசிராஜா நாடார் தெரு, முகவூர் தளவாய்புரம் மெயின் ரோட்டில் உள்ள வாருகாலில் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் நடைபாதையினரும், வாகனஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே வாருகாலை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செட்டியார்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.ராமச்சந்திரபுரத்தில் உள்ள சிமெண்டு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைவதுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சுந்தரபாண்டியம்.
அடிப்படை வசதி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காளையார் கரிசல் குளம் (கிழக்கு) ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் உள்ள தெருக்களில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தெருக்களில் உள்ள சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இ்ந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முருகேசன், காளையார் கரிசல்குளம்.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 47-வது வார்டு பகுதியில் உள்ள ஏ.வி.டி.புதூர் தெரு, நடராஜர் காலனி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.
ராமச்சந்திரன், சிவகாசி.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் சென்னல்குடி கிராமம், காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கண்மாய் குப்பை கிடங்காக மாறியுள்ளது. தேங்கும் குப்பைகளை சிலர் எரிக்கின்றனர். இதனால் காற்று மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கண்மாய் அருகில் உள்ள கிணற்றிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எனவே இதனை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நலம், சென்னல்குடி.