தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-12 19:18 GMT

சேதமடைந்த மின்கம்பம்

விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபரீதம் எதுவும் நேர்வதற்கு முன்னதாக இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தகோபால், விருதுநகர்.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ஆனைக்குட்டம் அணை கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சுக்கிரவார்பட்டி.

தொற்றுநோய் அபாயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தேங்கிய குப்பையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான், அருப்புக்கோட்டை.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, ராமமூர்த்தி ரோடு, பாண்டியன்நகர் பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகன விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மணிமாறன், விருதுநகர்.

ஆபத்தான பயணம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வத்திராயிருப்பு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர் என அனைவரும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கபிலன், கிருஷ்ணன்கோவில்.

பராமரிப்பற்ற பூங்கா

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு சார்பில் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பூங்காவானது பராமரிப்பின்றி மின்விளக்குகள் எரியாமல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் பூங்கா கழிவறைகள் சுத்தம் செய்யபடாமல் காணப்படுகிறது. எனவே பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்தி ஆனந்த், சாத்தூர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் செல்லும் சாலையின் ஓரங்களில் அதிக அளவில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் சாலையின் இருபுறமும் விலகி செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் இறக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், மம்சாபுரம்.

கழிவுநீர் கால்வாய் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கீழ ரத வீதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தால் கழிவுநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், திருச்சுழி.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ். ராமசந்திரபுரத்தில் உள்ள சிமெண்டு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்ந சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வத்திராயிருப்பு.

நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் வடக்கு பகுதியில் உள்ள செங்குளம் கண்மாயில் அதிக அளவில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் நீரை தேக்கி வைக்க பாதிப்பு ஏற்படுவதுடன் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சுந்தரபாண்டியம்.

Tags:    

மேலும் செய்திகள்