தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தெருநாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் சிறுவர்கள் வீதிகளில் விளையாட அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கட், திருச்சுழி.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு கண்மாய் நீரே முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. மாவட்டத்தில் காணப்படும் சில கண்மாய்களில் கருவேலமரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கருவேலமரங்களால் கண்மாயில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய்களில் உள்ள கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிமேகலை, விருதுநகர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட செம்பட்டி பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், செம்பட்டி.
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வாருகாலில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே வாருகாலை சரிசெய்து குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், ஓ.கோவில்பட்டி.
பொதுமக்கள் சிரமம்
விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தல் பொதுமக்கள் காத்திருக்கும் இடத்தில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்திட வாகனஓட்டிகள் முன்வர வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.