தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பட்டி காலனியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி அருகே பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணறு சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் கிணற்றின் அருகில் சிறுவர்கள் விளையாடுகின்றனர். எனவே கிணற்றை சுத்தப்படுத்தவும், கம்பி வேலி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வாகைகுளம்பட்டி அங்கன்வாடி மையத்தை சுற்றி வாருகால் அடைத்து சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை நீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
கோபி, காரியாபட்டி.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்குட்பட்ட லட்சுமியாபுரம், இடைய பொட்டல்பட்டி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், கங்காகுளம், துலுக்கன்குளம், கண்ணார்பட்டி, காலனி பெருமாள், தேவன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், லட்சுமியாபுரம்.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வினியோகிக்கப்படும் குடிநீரும் கலங்கலாகவும், செம்மண் கலந்து பயன்படுத்த முடியாத நிலையில் காண்ப்படுகிறது. மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமார், சாத்தூர்.