தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள ஒரு சில தெருக்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிருஷ்ணன்கோவில் முதல் நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு வரை உள்ள வெள்ளக்கரை ரோட்டில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டி மூடப்பட்டது. பின்னர் குடிநீர் குழாய்க்காக குழி தோண்டப்பட்டது. இதனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சாத்தூர்.
கூடுதல் பஸ்கள் தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சாத்தூருக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், சிவகாசி.
அடிப்படை வசதி வேண்டும்
விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக தண்ணீர், கழிவறை வசதிகள் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
அச்சுறுத்தும் நாய்கள்
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர், மல்லிகிட்டங்கி தெருவில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், வாகனஓட்டிகளை துரத்துகின்றது. இதனால் மாணவர்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெயச்சந்திரன், பாண்டியன் நகர்.