'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-03 18:06 GMT

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் தாயில்பட்டி ஊராட்சி பிரதான பஸ் நிறுத்தம் அருகே சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள், வெளியூரில் இருந்து வரக்கூடிய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு சுகாதார வளாகம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

ஆறுமுகம், தாயில்பட்டி.

குப்பைகள் அகற்றப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புதூரில் முப்பிடாதியம்மன் கோவில் எதிரே முகவூர் செல்லும் சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. அருகில் சுகாதார வளாக வசதி இருந்தும் அதை பயன்படுத்தாமல் சிலர் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமி, சொக்கநாதன்புதூர்.

சேறும் சகதியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சோழபுரம் ஊராட்சி 9 -வது வார்டில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேறும்-சகதியுமான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிந்தராஜ், சோழபுரம்.

குடிநீரில் புழுக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 14-வது வார்டு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்து புழுக்கள் கலந்து வருகிறது. மாசடைந்த இந்த நீரையே குழந்தைகள் முதல் முதியோர் வரை என அனைவரும் குடிக்கும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு வயிற்று உபாதைகள், நோய்தொற்றுகளால் அவதிப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் மாசுகலக்காத தூய குடிநீரை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

உதயகுமார், சிவகாசி,

குண்டும் குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி காமராஜர் புறவழிச்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கரபாண்டியன், அல்லம்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்